மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு இரு குழந்தைகள். 25 வயதான மூத்த பெண் பூர்ண சுந்தரி பிறப்பிலிருந்தே கல்வி ஆர்வம் கொண்டவர். ஆறாவது வயதில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறில் பார்வையை இழந்தார். இருந்தாலும் படிப்பு ஆர்வம் குறையாததால் தொடர்ந்து பெற்றோர் உதவியோடு பள்ளிக் கல்வியை முடித்தார்.

அதைத் தொடர்ந்து மதுரை பாத்திமா கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலமும் நிறைவு செய்தார். அத்தோடு தனது கல்விப் பயணத்தை முடிக்க விரும்பாமல், மக்கள் பணிக்குச் செல்ல விரும்பி, கடந்த 2016ல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தொடங்கினார். தொடர்ந்து நான்கு முறை தோல்வி அடைந்தார். இருந்தாலும் அவர் தன் விடாமுயற்சியையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை.

இதற்கிடையில் குடும்பச் சூழலுக்கு உதவுவதற்காக 2018ல் வங்கித் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் எழுத்தராகப் பணியாற்றினார். இதற்கிடையில் மக்கள் பணிக்கு சிவில் சர்வீஸ் தேர்ச்சி முக்கியம் என்கிற ஆசையும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் சென்னை மனிதநேய அறக்கட்டளை மூலம் அதற்கான பயிற்சியில் இறங்கினார். முழு மூச்சுடன் உழைத்து தற்போது வெற்றியும் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு இரு பார்வையற்றோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுள் ஒருவர் பூர்ண சுந்தரி. பார்வையில்லாமல் இருப்பதை ஒரு பலவீனமாகக் கொள்ளாமல் தன் இலக்கை மட்டும் நோக்கி நகர்ந்ததால் அதையெல்லாம் கடந்து பூர்ணமாய் நிறைந்து நிற்கிறார் பூர்ணசுந்தரி. விரைவில் மக்கள் பணிக்கு வரவிருக்கும் இந்த இளம் பெண் பலருக்கும் வெளிச்சம் தருவார் என நம்புவோம்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here