தாயுடன் சேர்ந்து கணவரை கூலிப்படை மூலம் கொலை செய்துள்ள மனைவி உட்பட 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வரும் இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 10 வயது மகள் மற்றும் 6வயது மகன் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 27ம் திகதி வீட்டை விட்டு வெளியில் சென்ற ரமேஷ் பாபு மீண்டும் வீடு திரும்பவே இல்லை. இதையடுத்து, ரமேஷ் பாபுவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து 28ம் தேதி மாலை 4 மணிக்கு உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இருசக்கர வாகனத்தில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு அங்கு சென்ற பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ரமேஷ் பாபுவின் மாமியார் சரசா மற்றும் மனைவி ஜெயந்தி ஆகியோர் அவரது உறவினர்கள் மற்றும் கூலிப்படையினரை வைத்து ரமேஷ் பாபுவை கொலை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், ரமேஷ் பாபு தினந்தோறும் குடித்துவிட்டு வந்து ஜெயந்தியை தாக்கியதால், தனது தாயுடன் இதுகுறித்து கூறியுள்ளார் ஜெயந்தி. இதனால் இருவரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு ஒரு மாதத்திற்கு முன்பு ரமேஷ்பாபு மீது காரை வைத்து மோதியுள்ளனர். இதில் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி ஆலாங்குப்பம் பாலாறு அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த ரமேஷ்பாபுவை பின்தொடர்ந்து சென்ற தனுஷ், கௌதமன், ராமன், விக்கி ஆகியோர் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மனைவி ஜெயந்தி மற்றும் மாமியார் சரசா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த இராமன், கௌதமன், விக்கி, தனுஷ் ஆகிய 6 பேரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here