பட்டப்பகலில் இளம்பெண் தீக்குளித்து துடிதுடிக்க, சுற்றியிருந்த அனைவரும் எந்தவித சலனமுமின்றி கடந்து சென்ற சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்துள்ளது. உயிருடன் எரிந்த அந்த பெண்ணுடனேயே மனித நேயமும் பொசுங்கி கொண்டிருந்த அந்த காட்சிகள், காண்போரை கதிகலங்க செய்துள்ளது.

உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தீயைப்பற்ற வைக்க முயற்சிக்கிறார் அந்த இளம்பெண். அந்த தேனீர் கடைக்கு வந்த நபரின் கவனம் டீ குடிப்பதிலேயே இருந்துள்ளது. அந்த பெண்ணிடமிருந்து தீப்பெட்டியை பிடுங்கி வீசவோ, பெட்ரோலை ஊற்றிய உடலில் தண்ணீரை ஊற்றி காக்கவோ யாருக்கும் மனமில்லை. அந்த பெண் தீயைப் பற்ற வைக்க, அருகில் இருந்த நபர் கையில் டீ-யுடன் ஒதுங்குகிறார். அந்த தருணமே மற்றொருவர் வீடியோ எடுக்க தயாராகிவிட்டதற்கு நாம் காணும் இந்த காட்சிகளே சாட்சி.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள கே.சி.பட்டியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முந்தானையில் நெருப்பை பற்ற வைத்த அடுத்த கணமே, “என்ன காப்பாத்துங்க” என வலியால் அலறி துடித்த அந்த இளம்பெண்ணின் கடைசிக் குரல் அங்கு இருப்பவர்களுக்கு கேட்காமல் இல்லை. உயிருடன் எரிந்த நிலையில் அந்த பெண் சரிந்து கிடக்க, எந்தவித சலனமுமின்றி அப்பகுதி மக்கள் போவதும், வருவதுமாக இருந்தனர். ஒருவர் மட்டுமே தன் கையில் இருந்த வேட்டியை போட்டு நெருப்பை அணைக்க முயல, தண்ணீரை ஊற்றுவதா, சாக்குப் பையை தேடுவதா என்பதற்குள் முற்றும் எரிந்துபோனது அந்த இளம்பெண்ணின் உடல்.

எரியும் நெருப்பில் துடிக்க துடிக்க உயிரிழந்துள்ளார் அந்த இளம்பெண். அதுவரையிலும் கேமிராவை அசைக்காமல் அந்த முழு வீடியோவையும் செல்போனில் பதிவு செய்யும் அளவுக்கு அங்கு மனிதாபிமானம் அற்றுப்போய்விட்டதை கண்கூடாக காண முடிகிறது.உயிரிழந்த அந்த இளம்பெண்ணின் பெயர் மாலதி. கணவனை பிரிந்து 6 வயது மகனுடன் வாழ்ந்து வந்த மாலதியை காதலித்த ஓட்டுனர் சதீஷ் என்பவர், பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருந்த நிலையில், பெற்றோர் பார்த்த வேறொரு பெண்ணை கடந்த வாரம் சதீஷ் திருமணம் செய்துள்ளார்.

இதனால், நியாயம் கேட்டு சதீஷின் வீட்டிற்கு வந்த மாலதியை உறவினர்கள் அடித்து விரட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாலதி, தமது 3 வயது குழந்தையை அருகில் உள்ள கடையில் அமர வைத்துவிட்டு, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here