கள்ளக்குறிச்சி அருகே நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சென்று, கதவைப் பூட்டி விளையாடிய இரு சிறுமிகள் வெளியே வர இயலாமல் மூச்சுத்திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் 4 வயது மகள் வனிதா, ஏழுமலையின் 7 வயது மகள் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் தமது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பழுதாகிக் கடந்த ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராஜா என்பவருக்குச் சொந்தமான காரின் கதவைத் திறந்து விளையாடியுள்ளனர். அதன் பின்னர் இரு சிறுமிகளையும் காணவில்லை என்று கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரம் ஆகியும் இரு சிறுமிகளும் வீடு திரும்பாத காரணத்தால் அவர்களின் பெற்றோர்கள் தேடியுள்ளனர்.

அப்போது அருகில் இருந்த காரின் உள்ளே இரு சிறுமிகளும் மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அவர்கள் இருவரையும் மீட்ட பொதுமக்கள், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகள் இருவரும் இறந்து போனதாக தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் உள்ளே சென்று கதவை பூட்டிக் கொண்டு விளையாடிய குழந்தைகளுக்கு காரின் கதவை எப்படி திறந்து கொண்டு வெளியே வருவது? என்பது தெரியவில்லை. மேலும் காரின் கண்ணாடிகளும் முழுவதுமாக ஏற்றப்பட்டிருந்ததால் வெளிக்காற்று உள்புகாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாக வாகனத்தின் உரிமையாளர் ராஜாமீது வழக்குப் பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். பெற்றோர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகள் எங்கு சென்று விளையாடுகிறார்கள் என்பதை கவனிப்பது அவசியம்.

அதே நேரத்தில் காரை நிறுத்திச்செல்லும் வாகன உரிமையாளர்கள், காரின் கதவுகள் பூட்டி இருக்கின்றதா என்பதை சரி பார்த்துச்சென்றால் இது போன்ற விபரீத சம்பவங்களை தவிர்க்கலாம்..!

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here