கதவு வச்ச ஒரு சின்ன வீடும், நான் டிகிரி படிக்க உதவியும் செய்தால் மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவை பாதுகாப்பாக வைத்துக் காப்பாற்றுவேன் என்று சொல்கிறார் பள்ளி பருவத்திலேயே குடும்ப சுமையைத் தலையில் சுமந்து விவசாய வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றும் மண் குடிசையில் வசிக்கும் சிறுமி சத்தியா..

‘மக்கள் பாதை’ தோழர்கள் மூலம் தகவல் அறிந்து அந்த மனதிடமிக்க சிறுமியைக் காண புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, கந்தர்வகோட்டை தாலுகா, பெருங்களூர் ஊராட்சி, போராம் கிராமத்திற்கு நண்பருடன் சென்றோம்..

நாம் சென்ற நேரத்தில் சிறுமி சத்தியா வீட்டில் இல்லை. ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் ஒரு தோட்டத்தில் கடலை பறித்துக் கொண்டிருப்பதாக தகவல் அறிந்து சிறுமியை வீட்டிற்கு வரச் சொன்னோம். செடி கொடிகள் அடர்ந்த ஒத்தையடிப் பாதையில் சென்றால் 10 அடி நீளம், 7 அடி அகலத்தில் ஒரு மண்குடிசை. பல வருடங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட தென்னங்கீற்று, சூரியன் அந்த வீட்டுக்குள் நேரடியாக ஆட்சி செய்தது.

வாங்கண்ணா.. என்று அழைத்த சகோதரி, சொன்ன அடுத்த வார்த்தை நம்மை ரொம்பவே பாதித்தது.. வந்தவங்களை வீட்ல உக்கார வச்சு தண்ணி கொடுத்து அப்பறம் தான் பேசத் தொடங்கனும். ஆனால் எங்க வீட்ல உக்கார இடமில்லை அண்ணா என்று கண்கள் கலங்கியபடியே சொல்லும் போது நம்மை ரொம்பவே பாதித்தது. மரத்தடியில் நிற்கிறோம் என்று சொல்லிவிட்டோம்.

இது தான் எங்க வீடு என்று சொன்ன போது அந்த வீட்டுக்குள் சென்றால் சாப்பாட்டு பாத்திரங்கள், தண்ணீர் குடங்கள் முழுமையாக வீட்டை நிரப்பி இருந்தது. சில குச்சிகளை அடுக்கி செல்ஃபாக வைத்து அதன் மேல் கரையான் தின்ற அவரது புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒற்றை மின் விளக்கு இருந்தது. இது தான் சத்தியாவின் மாளிகை..

தொடர்ந்து சத்தியாவிடம் பேசினோம்.. ”எங்க அப்பா ராமையா கஜா புயல் முடிந்து சில மாதங்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துட்டார். அம்மா செல்வமணி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். நான்தான் குடும்பத்தை சுமக்கிறேன். இருக்கிற இந்த குடிசைக்கும் பட்டா இல்லை. ஒற்றை விளக்கு மட்டும் இருக்கிறது. பல வருடமாக இங்கேதான் இருக்கிறோம். சுற்றி உள்ளவர்கள் எங்கள் உறவுகள் தான். இந்த வீட்டில் இருந்துதான் படித்து 10 ஆம் வகுப்பில் 500 க்கு 403 மார்க் வாங்கினேன். அப்பா இறந்த பிறகு அம்மாவையும் பார்த்துக் கொண்டு லீவு நாட்களில் விவசாய கூலி வேலைக்கு போய் அதில் கிடைக்கும் சம்பளத்தில் வீட்டுச் செலவுகளையும், என் படிப்புச் செலவுகளையும் பார்த்துக் கொண்டேன். இப்படி விடுமுறை நாட்களி்ல வேலைக்கு போறதால படிக்க நேரம் கிடைப்பதில்லை அதனால ப்ளஸ்-2 வில் 323 மார்க் வாங்கினேன்.

மேலும் படிக்க ஆசையாக உள்ளது. புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறேன். எங்கே படிக்க போனாலும் மாலை வீட்டுக்கு வந்தால்தான் அம்மாவை பார்த்துக் கொள்ள முடியும். அம்மா சிகிச்சைக்கு போகலாம் என்று அழைத்தாலும் வர மறுக்குறாங்க. அதனால அவங்கள தனியா விட்டுட்டு போக முடியாது.

வீட்டில் கதவு இல்லை. அதனால எனக்கும் எங்க அம்மாவுக்கும் பாதுகாப்பு இல்லை. இரவில் நானும் எங்க அம்மாவும் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் படுத்துக் கொள்வோம். எங்களுக்கு கதவு வச்ச ஒரு சின்ன வீடும், டிகிரி படிக்கவும் உதவுனா போதும் அண்ணா” என்று கண் கலங்கி சொன்னவர் ”அண்ணா வேலை செய்ற இடத்துல தேடுவாங்க நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.

அப்போது அங்கு வந்த மக்கள்பாதை பெருங்களூர் பகுதி பொறுப்பாளர் ராஜேஷ்கண்ணன் நம்மிடம்.. ”இந்தப் பக்கம் ஒரு வீடு இருப்பதை கரோனா ஊரடங்கு நிவாரணம் கொடுக்க வந்த போதுதான் பார்த்தோம். அப்பதான் இந்த சகோதரியிடம் விசாரித்த போது அவரது நிலைமையைச் சொன்னார். ரொம்ப கஷ்டமாக இருந்தது. எப்படியாவது ஒரு வீடுகட்டிக் கொடுத்துவிட்டு படிக்கவும் உதவி செய்தால் போதும். அதன்பிறகு அவரது தாயையும் தன் வாழ்க்கையையும் பார்த்துக் கொள்வார். ஏனென்றால் சத்தியா மனதிடம் உள்ளவராக இருக்கிறார். 13 வயது முதல் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு தாயை வைத்துக் கொண்டு கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை வழிநடத்திக் கொண்டு படித்திருக்கிறார். சத்தியாவிற்காக தாராளமனம் படைத்தவர்களிடம் மக்கள் பாதை மூலம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறோம் விருப்பமும், உதவி செய்யும் மனமும் கொண்டவர்கள் தாராளமாக உதவலாம். உங்கள் உதவி ஒரு குடும்பத்தை உயர்த்தும்” என்றார்.

நாம் பார்த்து அறிந்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டு சென்றோம்.தகவல்களை கவனமாக கேட்டுக் கொண்டவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சத்தியாவிற்கான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் நாளையே தொடங்கும் என்றார் நம்பிக்கையாக.

உதவிகள் செய்ய மனமுள்ளவர்கள் சிறுமி சத்தியா 9751356576, மக்கள்பாதை புதுக்கோட்டை 6369696715 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவிகள் செய்யலாம்.

நன்றி: நக்கீரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here