சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, பேட்டிங் செய்த பெங்களூரு அணி சென்னை சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலுக்கு தாக்குபிடிக்காமல் விக்கெட்களை பறிகொடுத்தது.

முதல் 3 விக்கெட்களை சாய்த்தார் ஹர்பஜன் சிங். அவரை தொடர்ந்து இம்ரான் தஹிரும் அசத்தலாக பந்துவீசி 3 விக்கெட்களை சாய்த்தார்.

பெங்களூரு அணி 17.1 ஓவரில் 70 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. ஹர்பஜன், இம்ரான் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, 71 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஆனால், சென்னை வீரர்களாலும் பெரிதாக அடிக்க முடியவில்லை.

வாட்சன் 10 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். ரெய்னா 21 பந்தில் 19 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய அம்பத்தி ராயுடு 42 பந்துகளில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் சென்னை அணி, 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

கேதர் ஜாதவ் 13(19), ஜடேஜா 6(15) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணியில் சாஹல் 4 ஓவர்கள் வீசி வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

முதல் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து இருந்தனர். ஆனால், ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் டி20 போட்டி டெஸ்ட் போட்டியைப் போல மாறிவிட்டது. இருதரப்பு வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.

பவுண்டரிகளே அரிதாகதான் அடிக்கப்பட்டது. சிக்ஸர்கள் சொல்லவே தேவையில்லை. நிறைய பந்துகள் டாட் பந்துகள் ஆனது. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக சென்னை அணியில் தோனி பேட்டிங் செய்யவே இல்லை.

மேலும் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here