ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்த இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்ற ரீதியிலேயே போட்டியை எதிர்கொண்டது. ஆனால், இறுதியில் அஸ்வின் செய்த தந்திரத்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இப்போது அஸ்வின் செய்த அந்த தந்திரம்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம், ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார்.

ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் என ரன் மழையை பொழிந்துக் கொண்டிருந்தார். ஆட்டத்தின் 13 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார், ஜோஸ் பட்லர் ரன்னர் திசையில் நின்றுக் கொண்டிருந்தார்.

அஸ்வின் 13 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை வீசும் போது, பட்லர் க்ரீஸை விட்டு வெளியே நகர்ந்தார். அப்போது அஸ்வின் “மன்கட்” முறையில் ரன் அவுட் செய்தார்.

அதாவது ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரன்னர் க்ரீஸை விட்டு வெளியே வந்தால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் இக்கட்டான நேரத்தில் இதனை செய்திருக்கிறார்கள்.

கிரிக்கெட்டில் “மன்கட்” முறையில் ரன் அவுட் செய்வது அரிதினும் அரிதான விஷயம்தான். இம்முறையில் ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க செய்வது சரியா? தவறா? என்ற விவாதம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பல உள்ளூர் போட்டிகளில் கூட “மன்கட்” முறையில் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இதே ஜோஸ் பட்லரை இலங்கையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே “மன்கட்” முறையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். பொதுவாக பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியேறும் போது, பேட்ஸ்மேனுக்கு பவுலர் “எச்சரிக்கை” கொடுப்பார்கள். ஆனால் எச்சரிக்கை கொடுக்க வேண்டுமென்பது விதியல்ல. நேற்றைய போட்டியில் அஸ்வின் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் தான் அவுட் செய்துள்ளார்.

“மன்கட்” ரன் அவுட் பெயர் காரணம் ?

1947 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஆஸி வீரர் பிஸ் பரவுனை இந்தியாவின் வினோத் மன்கட் இம்முறையில் அவுட் செய்தார். இது அப்போது சர்வதேச அரங்கில் பெரும் பேசுப் பொருளானது.

ஆனால், இந்த ரன்அவுட் கிரிக்கெட் விதிகளில் இருப்பதால், “மன்கடட்” ரன் அவுட் என பின்பு பெயர் வைக்கப்பட்டது. ஒரு முறை தென் ஆப்பிரிக்க வீரர் பீட்டர் கர்ஸ்டனை கபில்தேவ் இருமுறை எச்சரிக்கை செய்தும் அவர் பணியாததால் கடைசியில் பந்து வீச வருவது போல் வந்து ரன்னர் முனை பைல்களை அகற்றினார். இதனால் பீட்டர் கர்ஸ்டன் அவுட் ஆனார்.

கிரிக்கெட் உலகில் இதுபோன்ற அவுட்டுகளை ஏற்படுத்தாத பெருந்தன்மையான சில வீரர்களும் இருந்தார்கள். உதாரணத்துக்கு 1987 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாக் அவுட் போட்டியில் பாகிஸ்தானின் கடைசி வீரர், பந்து வீசும் முன்னரே கிரீசை விட்டு ஓடி முன்னேறிய போது அப்போது பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்ட்னி வால்ஷ், அவரை ரன் அவுட் செய்திருந்தால் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் வெஸ்ட் இண்டீஸ்.

ஆனால் கார்ட்னி வால்ஷ் அந்த பாக். வீரரை கிரீசிற்குள் செல்லுமாறு கூறினார். கடைசியில் இதனால் மேற்கிந்திய அணி தோற்றது, தொடரில் இருந்து வெளியேறியது.

ஐபிஎல் போன்ற போட்டிகள் கடும் சவாலானவை, இங்கு வெற்றி மட்டுமே முக்கியமாக பார்க்கப்படுகிறது, பெருந்தனைமக்கு எல்லாம் இடமில்லை. எனவே விதியின்படி அஸ்வின் செய்தது சரியே.

மேலும் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்ள நமது பழங்குடி செய்திகள் இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here